search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேஸ்புக்கில் கருத்து"

    பேஸ்புக்கில் போலீசை கண்டித்து கருத்து தெரிவித்தது தொடர்பாக நாம் தமிழர் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
    செங்கல்பட்டு:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்துக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.

    துப்பாக்கி சூடு குறித்து பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் வெளியாகின. இதில் போலீசாரை கடுமையாக விமர்சனம் செய்து பேஸ்புக்கில் ஒரு விமர்சனம் வெளியானது.

    அதில், ‘தூத்துக்குடியில் அப்பாவி மக்களை சுட்டுக் கொன்ற போலீசாரை சும்மாவிடக்கூடாது. போலீஸ் நிலையத்தை தாக்க வேண்டும். போலீஸ் வாகனங்களை உடைக்க வேண்டும். போலீசாரின் குடும்பத்தையும் விடக்கூடாது’’ என்று குறிப்பிட்டு இருந்ததாக கூறப்படுகிறது.

    பேஸ்புக்கில் இதை பதிவு செய்தவர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

    இதில் போலீசுக்கு எதிராக இந்த கருத்தை பதிவு செய்தவர் கூடுவாஞ்சேரியை அடுத்த காரணைபுதுச்சேரியை சேர்ந்த பாலாஜி (31) என்பது தெரியவந்தது. இவர் நாம் தமிழர் கட்சி பிரமுகர்.

    இதையடுத்து பாலாஜியை கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்தனர். அவர் மீது போலீசுக்கு எதிராக கலவரம் செய்ய பொது மக்களை தூண்டியதாக கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்தார்.

    பின்னர் நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலாஜி செங்கல்பட்டு 2-வது குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதை தொடர்ந்து நீதிபதி உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார். #ThoothukudiProtest
    ×